Home » Cover Story » தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்

 
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்


கந்தசாமி இல.செ
Author:

“ஒரு நாடு, நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அந் நாட்டில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, அதைப் பொறுத்தே அந்நாட்டின் வளர்ச்சியைக் கணிக்க முடியும், என்பது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் ஔவையார் சொன்ன கருத்துக்கு முன்னுதாரணமாக விளங்குவது “இஸ்ரேல் நாடு” என்றால் அது மிகவும் பொருந்தும்.

உலகப் படத்தில் ஐரோப்பாவின் கீழ்க்கோடியில் ஒரு புள்ளியாகத் தோன்றுவது இஸ்ரேல். பரப்பளவைப் பொறுத்தவரை அது நம்நாட்டு கேரள மாநிலம் அளவு தான். 20700 சதுர கிலோமீட்டர் 115 மலை நீளம் 20 மலை அகலம்). அதிலும் பாதி பாலைவனம்.

மழை பெய்வதோ அபூர்வமான செயல். அந்த நாட்டின் சராசரி மழை அளவு ஆண்டுக்கு 16 அங்குலம்தான். அதாவது 40 சென்டி மீட்டர். தமிழ்நாட்டை விடக் குறைவு (தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு 112 சென்டிமீட்டர். 45 அங்குலம்.) கிட்டதட்ட இரண்டுமடங்கு மழை தமிழ்நாட்டில் அதிமாகப் பெய்கிறது.

மக்களோ எண்ணிக்கையில் 45 இலட்சம் பேர்தான். அதில் யூதர்கள் 85 விழுக்காடு. முஸ்லீம்கள் 11% கிறிஸ்தவர்கள் மற்ற இனத்தவர்கள் சேர்ந்து 4 விழுக்காடு.

மண் வளம் இல்லை. மழை வளமும் இல்லை. ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என்று சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஜரோடான் ஆறு சிறிய அளவில் ஓடுகிறது. வடபகுதியில் கலீலி (Sea Galille) என்று சொல்லும் ஏரி ஒன்று உள்ளது.

ஆனாலும் அவர்கள் வேளாண்மையில் முண்ணிணியில் இருக்கிறார்கள். எப்படி?

அவர்கள் சித்தாந்தமே “நிலத்துக்கு நீர்ப்பாய்ச்சாதீர்கள் பயிருக்கு நீர்ப்பாய்ச்சுங்கள்” என்பதுதான்.

முதலில் நீர்த்தேவை மிகுந்த நெல், கரும்பு இரண்டையும் அவர்கள் நாட்டிலேயே காண முடியாது. அதை அவர்கள் தெரிந்தே தவிர்த்து விட்டார்கள். அவர்களது நாட்டுத் தேவைக்கு எளிமையாக அவர்கள் பிற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்து கொள்கிறார்கள்.

பழமரங்கள், காய்கறிகள், போன்ற நீண்ட காலப் பயிர்கள், கோதுமை, பருத்தி போன்ற குறைந்த நீர்தேவை உள்ள பயிர்கள், நல்ல விற்பனையுள்ள ரோஜா, சாமந்தி போன்ற மலர்ப்பயிர்கள் இப்படி எதில் அதிக வருமானம் கிடைக்குமோ, எந்தப்பொருளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ளதோ அந்தப் பயிர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பயிர் செய்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் நீர் இறைத்துப் பாசனம் செய்வதை உதாரணத்துக்கூடக் காண முடியாது. நாடு முழுவதும் தெருவில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப்பார்க்க முடியாது. எல்லா இடங்களிலும் சொட்டு நீர்ப்பாசனம் அல்லது தெளிநீர் பாசனமதான்.

தெரு ஓரங்கள் இருக்கும் மரங்களுக்கு, தெருவை நடுவில் இரண்டாகப் பிரிக்கின்ற இடத்தில் உள்ள பூஞ்செடிகளுக்கு, தெரு ஓரப் பூங்காக்களுக்கு, வீட்டுத்தோட்ட தோட்டத்தில் வைத்திருக்க காய்கறி, பூஞ்செடிகளுக்கு எல்லாம் சொட்டுநீர்ப்பாசன மயம் தான் ஏன் இப்படி?

இவ்வாறு செய்வதால் ஒரு மடங்கு பயிர் இடத்தில் மூன்று மடங்கு நிலத்தினைப் பயிர் செய்து பாசனம் செய்யவும் முடிகிறது. நல்ல விளைச்சலும் கிடைக்கின்றது.

இதனால் அவர்கள் தொடர்ந்து சொட்டுநீர்ப் பாசன முறையிலேயே ஆராய்ச்சி செய்து உரம் பூச்சி மருந்து எல்லாம்கூடத் தண்ணீர் வழியாகவே செலுத்திவிடுகிறார்கள்.

அதற்காக புதிய வார்த்தை ஒன்றையே அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். Fetrication என்பது அந்தப் புதிய வார்த்தை.

தண்ணீரை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்.?

மழை பெய்யும் பொழுது மழை நீரைச் சிறிதும் வீணாக்காமல் மலை அடியோரப் பகுதிகளில் குளம் கட்டி அதில் தேக்கி அந்த நீரை நாடு முழுதும் குழாய்கள் வழியாகவே கொண்டு செல்கிறார்கள். வாய்க்கால் என்பதே அங்கு கிடையாது. நிலத்தின் வழியாக நீரைச் செல்லுவதேயில்லை.

மற்ற இடங்களில் மழைநீரைச் சேமிக்க அவரவர்களுக்கு ஏற்ப சிறிய பெரிய அளவில் குளம் அமைத்திருக்கிறார்கள். குளத்தின் அடியில் பாலிதீன் பேப்பர் போட்டு மண்ணுக்குள் நீர் இறங்காமல் செய்து விடுகிறார்கள். அந்தத் தண்ணீரையும் பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேலின் வடபகுதி சற்றே பசுமையாக உள்ளது. அத்தகைய நிலத்தடி நீர் உள்ள வளமான பகுதியில் குழாய்க் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துப் பாய்ச்சுகிறார்கள்.

நீர்ப் பாய்ச்சுவதையும் தற்பொழுது மிகவும் சுலபமாக்கி இருக்கிறார்கள். விதைத்து விட்டு அல்லது நடவு போட்டுவிட்டு சொட்டு நீர்ப் பைப்புகளைப் போட்டு விடுவதோடு சரி.

தண்ணீர் வருகின்ற குழாயுடன் Timer (உரிய நேரத்தில் நினைவூட்டும் கருவி) என்ற ஒரு பிளாஸ்டிக்கால் ஆன கருவியைப் பொருத்தி விடுகிறார்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டுமா? ஒருநாளைக்கு மூன்று முறை நீர் பாய்ச்ச வேண்டுமா? எத்தனை முறை? எவ்வளவு இடை விட்டு? என்று நாம் அந்த “டைமர்” கருவியில் குறித்து விட்டால் போதும். நம் வீட்டில் அலாரம் அடிப்பதை போல அந்தந்த நேரத்தில் நீர் பாய்ச்சப்படும். நூறு இரு ஏக்கரைக்கூட ஒருவர் பார்த்துக் கொள்ளலாம்.

எங்கேயும் தவறு நேர்ந்தால் கம்யூட்டர் காட்டிவிடும். அந்தப் பகுதியை மட்டும் சரி செய்தால் போதும். இந்த நிலையில் அவர்கள் அறிவின் மூலம் ஆராய்ச்சியின் மூலம் இடைவிடாத உழைப்பின் மூலம் அந்நாட்டு மக்கள் உயர்ந்து இருக்கிறார்ர்கள். ஒரு பயிருக்கு எவ்வளவு நீர் தேவை. எத்தனை முறை நீர் பாய்ச்ச வேண்டும் சொட்டு நீர் முறையில் பாய்ச்சப்படுவதில்கூட ஆவியாகப் போவது எவ்வளவு? எனபதற்கெல்லாம் தேவையான ஆராய்ச்சியின் முடிவுகளை உழவர்களுக்குக் கொடுத்து விடுகிறது அரசாங்கமும் பல்கலைக்கழகமும். அதற்கேற்ப அவர்கள் பயிர் செய்கிறார்கள்.

இனி வருங்காலத்தில் தண்ணீரே இல்லை என்றால் கூட வெளி நாட்டிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கிக் கப்பல் வழியாக்க் கொண்டு, வந்து கப்பலில் இருந்தபடியே பயிர் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. அவ்வளவு தெளிவு – அவ்வளவு முயற்சி. அந்த நாட்டின் நீர்ப்பாசன முறையைப் பார்க்கும் பொழுது நம்மிடம் உள்ள நீர்வளத்தைக் கொண்டே நாம் பயிரிட்டுவிடலாம் என்றே தோன்றுகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!