Home » Cover Story » இதோ ஓர் அனுபவம் பேசுகிறது

 
இதோ ஓர் அனுபவம் பேசுகிறது


சுதந்திரா ஏ
Author:

ஒரு நண்பரின் சிக்கல்கள் தீர்ந்தவிதம்

ஒரு அரசு அலவலர் நல்லவர். ஆனால் யார் எதைச் சொன்னாலும் நம்பி விடுபவர். பிறர் சொல்வதைக் கேட்கக் கூடியவர். அவருக்கும் கீழ் பணியாற்றுகின்ற அவரது அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித் தனியாக அவரிடம் சென்று, உங்களைப் பற்றி “அவர் அப்படிச் சொல்கிறார், இவர் இப்படிச் சொல்கிறார் உங்களுக்குத் திறமையே இல்லை என்று ‘இவர் சொல்கிறார், என்று சொல்லி அலுவலரிடம் அனுதாபத்தைப் பெற்று அவரிடம் அன்புடையவர் போலக் காட்டிக் கொள்வார்கள்.

அவரும் அதைப் பெரிதாக மனதில் போட்டுக்கொண்டு ஒவ்வொருவரையும் ஏன் அநேகமாக அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் எதிரிகள் போலவே கருதி வந்தார்.

ஒவ்வொருவரைப் பற்றியும் நினைக்கும் போதெல்லாம் அந்த அலுவலருக்கு இரத்தம் கொதிக்கும். அலவலர் தமது வீட்டிலும் கூட, வந்தவர் போனவர் எல்லோரிடத்திலும் இந்த வேண்டாத செய்திகள எல்லாம் சொல்லி வீட்டையும் தன்னைச் சூழ்ந்துள்ளவர்களயும் அமைதியை இழக்கும்படிச் செய்துவிடுவார்.

வாழ்க்கையே வெறுத்த நிலையில் அலுவலர் என்னிடன் வந்தார். நிலமைகளை விளக்கினார். நிம்மதியே போய்விட்டது ஐயா என்று புலம்பினார். அவரது முகம் கலவரமடைந்து காணப்பட்டது. தேவையில்லாதவற்றிற்கெல்லாம் கோபப்பட்டு அலுவலகம், வீடு, நண்பர்கள் சுற்றுப் புறம் எல்லாம் எதிர்பான சூழ்நிலை.

இவருக்குச் சொன்ன அறிவுரை

இன்று முதல் இரண்டு காரியம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஒன்று அலுவலக நடைமுறைகள் தவிர வேறு செய்திகள் அலுவலகத்தில் பேசுவதில்லை, என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன்.
இரண்டாது மற்றவர்களைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ யாரேனும் உங்களிடன் பேச்சு எடுத்தால் அதை ஒரு போதும் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் நடைமுறையில் கடைபிடிக்கத் தொடங்கினார்.

அலுவலகப் பணிகள் தவிர யார் எதைச் சொல்ல வாய் எடுத்தாலும் அவர் அதை ஒத்துக் கொள்வதில்லை. பேசுவதும் இல்லை. இரண்டாவது பிறரைப் பற்றிக் கோள்சொலவும் அவர் அனுமதிப்பதில்லை.

மேலும் தன்னைப் பற்றி எது சொன்னாலும் அவர் கவலைப்படுவதில்லை. இப்படி முழுமையாக ஒருமாதம் கூட இவர் கடைப்பிடித்திருக்கமாட்டார். அதற்குள் அலுவலகமே அமைதி அடைந்து விட்டது.

மீண்டும் அந்த அலுவலர் நண்பர் வந்தார்.

சற்றே மனந்திறந்து பேசினார். இதுநாள் வரை நடந்த குழப்பங்களுக்கு நான்தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றார். காரணம் ஒவ்வொருவர் சொல்வதையும் மனதில் வைத்துக் கொண்டு, தவறான கண்கொண்டே ஒவ்வொருவரையும் பார்ப்பது. அதனால் ஒவ்வொருவரிடத்திலும் குற்றம் காண்பது, அதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் வெறுப்பை மட்டும் உமிழ்வது. இப்படி நடந்த நிலை மாறி இன்று எல்லோரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். இதுவரை தவறு என்மேல்தான். இப்போது திருந்திவிட்டேன். நன்றி என்று சொன்னவர் சற்றே தயங்கினார்.

தனக்கும் கீழ்பணியாற்றுகின்றவர்கள் சொல்வதை இவரால் தடுத்த நிறுத்த முடிந்தது. நிம்மதி அடைந்தார். ஆனால் தனக்கும மேல் உள்ள அலுவலர்கள் இதே குறையைச் செய்தால்? ஒவ்வொருவரைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் – இப்படி ஒரு சூழ்நிலை அவருக்கு நேர்ந்தது. இப்படிப் பல அதிகாரிகள் குடும்பத்தலைவர்கள், தலைவிகள அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அத்தகைய நேரங்களில் நாம் அவர் அறைக்குச் செல்வதைக் கூடுமானவரை தவிர்த்து விட வேண்டும். அல்லது நீங்கள் சென்ற பின் தான் அவர் பேசத் தொடங்கினார் என்றால்? அவர் சொல்ல ஆர்வம் காட்டாதீர்கள். குறைந்தது அவர் சொல்லும் தவறான கருத்துக்கு ஆமாம் போடாதீர்கள். சிரித்து மழுப்பி விடுங்கள். இப்படிச் செய்தால் – நீங்கள் இருக்கும் போது பிறரைப் பற்றிக் குறையாக பேசமாட்டார் என சொன்னேன்.

இவற்றை முழுமையாக தீர்த்துக் கொள்ள ஒரே ஒரு வழி. பிறரைப் பற்றி நாம் குறை சொல்லாமல் இருப்பது. நம்மைப் பற்றி பிறர் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் கடமையைச் செய்வது. இது நாம் செய்ய வேண்டியது.

இந்த ‘ஆமாம்’ போடுகின்றவர்கள் பற்றியும் ஒரு கருத்துச் சொல்ல வேண்டும். நம்மை பொறுத்தவரையில் இவர்கள் மனிதர்களே அல்ல. அநியாயத்துக்குத் துணை போகின்றவர்கள். எப்படி மனிதர்களாகக் கருதமுடியும். அநியாயமாகப் பேசுகின்றவர்களுக்கு அப்படி ஆமாம் போடுகின்றவர்களை அப்போதைக்கு யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் மனத்தளவில் ஒவ்வொருவரும் அத்தகையவர்களை வெறுக்கவே செய்வார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிலமை மாறும் போது அவரை எல்லோரும் கைவிட்டு விடுவார்கள். நண்பர்கள், உடன் பணியாற்றுவோர். ஏன் குடும்பத்திலுள்ள பெண்டு பிள்ளைகள்கூட அவர்களை மதிக்க மாட்டார்கள்.

அந்தக் குறிப்பிட்ட அலுவலர் இருக்கும்வரை இந்த நண்பரின் காலம் ஓடும். அவர் போய்விட்டால் இந்த ஆமாம் போடுபவர் பாடு இரண்டு மடங்கு துன்பமாக இருக்கும். ஆதலின் நாம் மனிதர்களாக நல்லவர்களாக இருந்தால் வல்லமை’ தானே வரும்.

ஆக ஒருவரின் நிம்மதிக்குத் திறமையான செயல்பாட்டிற்கும் சிறந்த வழி, பிறரைப்பற்றிப் பேசாமல் – பிறரைப் பற்றிக் குறை சொல்லாமல் இருப்பதுதான் என்று என் அனுபவத்தை அவரிடம் சொல்லிக் கடைப்பிடிக்க வைத்து இப்போது அவர் சிறப்பாகப் பணி புரிகின்றார். மகிழ்ச்சியாக இருக்கின்றார்.

இந்த அணுகு முறையால் குடும்பச் சிக்கல்கள் முதற்கொண்டு நாட்டுச்சிக்கல்கள் வரை எதை வேண்டுமானாலும் முடிந்த அளவிற்குத் தீர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் நாம் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது. நமது மனக்குழப்பங்களே நம்மைத்
துன்பத்தில் ஆழ்த்தும். முன்னோக்கியும் செல்ல முடியாது.

முன்னேற விரும்புகின்றவர்களுக்குப் பழைய நிகழ்ச்சிகள் பாடங்களாக அமைய வேண்டுமே தவிர பெரும் பாரமாக அழுத்தக்கூடாது. இதை எழுத வாய்ப்பாக இருந்த அந்த அலுவலர் நண்பர்க்கு நன்றி.

-சிறப்பாசிரியர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1990

சிந்தனைத்துளி
'தன்னம்பிக்கை'
இளைஞர்களுக்கு….
மாதம் ஒரு நூல்
புன் சிரிப்பு கொஞ்சம்!
கங்கை காவிரியை இணைப்போம்
கிழவனும் மரமும்
தீர்வு
இளைஞர்களிடையே காதலும் காமமும்
அறிஞர்கள்…
நம்பிக்கை இழைகள்
முற்போக்காக சிந்தித்தால்…
புறப்படு நண்பனே!
இதோ ஓர் அனுபவம் பேசுகிறது
வெற்றி உங்களை வந்தடைய
அறிவு வளர்ச்சியோடு இதய வளர்ச்சியும் தேவை
ஆளுக்கொரு சிறுமியின் கல்விச் செலவை ஏற்போம்
என் சக ஜீவனே….