Home » Articles » இளைஞர்களிடையே காதலும் காமமும்

 
இளைஞர்களிடையே காதலும் காமமும்


கந்தசாமி இல.செ
Author:

(கடந்த சில ஆண்டுகளாக எனது தன்முன்னேற்ற நூல்களைப் படித்துவிட்டு, எனக்கு வருகின்ற கடிதங்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கடிதங்கள் காதல் – காமம் – தவறான உறவுகள் – கணவன் மனைவிக்குள்ளே எழுந்துள்ள சந்தேகங்கள் – இப்படிப்பட்ட கடிதங்களே அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களுக்குச் சரியான வழி காட்டுதல் இருந்ததால் – இதுவரை தவறி இருந்தால் கூட இன்று திருந்தி வாழ்வதற்குத் தாயாராக இருக்கிறார்கள். எனக்கு வந்த சுமார் 2000 கடிதங்களில் நான் தனியாகப் பதில் எழுதியவை மிக மிகக் குறைவானவையே.

கடிதம் எழுதியவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் எழுத இயலாமைக்காக உரியவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். ஒவ்வொரு கடிதத்தையும் படித்து ‘இதற்கு இது தீர்வு’ என்று என்னுள் ஆழமாக எண்ணுகிறேன். அந்த முடிவையே அவர்கள் எடுப்பார்கள் – எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எண்ணத்திற்கு வலிமை உண்டு என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடையவன். அப்போதைக்கு அந்தக் கடிதத்திற்குக் கொடுக்கின்ற தீர்வு அதுதான்.

இருப்பினும் என்னுள் ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. அதைத் தீர்த்துக் கொள்ளவே இந்தத் தொடர் கட்டுரை. உங்களில் சிலர் எழுதிய சிக்கல்களுக்கு ஏதேனும் ஒரு வரியில் தீர்வு எழுதப்படிருக்கும். படியுங்கள் – சிந்தியுங்கள் – முடிவு எடுங்கள். முடியாவிடின் மீண்டும் கூட எழுதுங்கள். இந்தக் கட்டுரை – அல்லது இனி தொடர்ந்து வருகின்ற கட்டுரைகள் வழியாக இதுவரை எனக்கு எழுதிய அனைவருக்கும் இனி – எழுதப்படுகின்ற கடிதங்களுக்கும் நிச்சயமாகப் பதில் கிடைக்கும் கட்டுரை வடிவில்.

வியர்வை வரும்வரை ஏதேனும் ஒரு வேலை செய்யுங்கள் – வேறு வேலை இல்லதாவர்கள் வீட்டு வேலைகளையேனும் செய்யுங்கள் – உழைப்பு தெளிவைக் கொடுக்கும்; உழைப்பு ஒன்றுதான் உயர்வுக்கு வழி!

இளமை அழகானது. ஆற்றல் வாய்ந்தது. இளமை தூய்மையானது. உண்மை நிறைந்ததுங்கூட.

இளைஞர்கள் இரக்க உணர்வு மிகுந்தவர்கள். இளைஞர்கள் அநீதியை கண்டு சீற்றங்கொள்பவர்கள். சாதனைகளை நிகழத்தித் துடிப்பவர்கள். வெற்றியை நோக்கியே செல்பவர்கள்.

அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் தகுந்த இலட்சியமும் வாய்ப்பும் அமையவில்லையாயின் அவர்கள் தடம் புரண்டு போய் விடுகிறார்கள். சிலர் மீண்டு வருகிறார்கள். சிலர் மீண்டு வருவதேயில்லை. உயிரோடு இருந்து கொண்டே மாண்டுபோகிறார்கள்.

இந்த இளமைக் காலத்தில் இளமை உள்ளங்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பது இயல்பு. இளைஞன் அழகாக உடுத்த எண்ணும் போதும் இளம் பெண்மணி தன்னை அடிக்கடி அழகுபடுத்திக் கொள்ள முனையும்போதும் இனம் தெரியாத – ஏதோ ஓர் ஈர்ப்புக்கு இவர்கள் ஆளாகி விட்டார்கள். என்பதைப் பெற்றோர் உணர்ந்துகொள்ளலாம்.

இந்த நேரத்தில் தன்மனதுக்குப் பிடித்த ஒரு பெண்ணின் பொதுப்பார்வைகூட இவனக்குத் தன்னை நோக்கிப்பார்த்ததாகத் தோன்றும். அந்தப் பெண்ணின் சிறு புன்முறுவல் கூட இவனுக்கு மாபெரும் நட்சத்திர மின்னலாகத் தோன்றும். அவள் பாட நோட்டுப் புத்தகத்தில் எழுதிய வெறும் எழுத்துக்கூட இவனுக்குக் காவியமாக சிற்பமாக, ஓவியமாகத் தோன்றும்.

இவன் அவளது ஒரு பார்வைக்காக ஏங்குவான்.

தன்னை ஒழுக்கமுள்ளவனாக – கெட்டிக்காரனாக ஆக்கிக் கொள்ள முயல்வான். இந்தப் பெண்ணும் அப்படியே.

இவர்கள் இன்னும் பேசியே அறியார்கள். ஒருவர் பார்வையில் ஒருவர் பட்டுப்பட்டு மகிழ்ந்து நினைந்து நினைந்து பார்த்துக் கொள்வார்கள். ஏன்? ஒருவரை ஒருவர் இப்படி நினைந்து பார்த்துக் கொள்கிறோம் என்பதும் அவர்கள் இருவருக்கும் தெரியும்.

இன்னும் அவர்கள் ஒரு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. ஆயிரம் பேருக்கு மத்தியில் இருந்தாலும் ஒருவர் பார்வை ஒருவர் மீது விழுந்துவிடும். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்க்காததுபோல் பார்த்துக் பார்த்து மகிழ்ந்து கொள்வார்கள்.

அடுத்த கட்டம்,

ஒருவரையொருவர் பார்க்க முடியாத போதுதான் இவர்கள் துன்பம் உணர்கிறார்கள், உண்மையை உணர்கிறார். ஒருவரையொருவர் விரும்புகிறோமோ? என்று ஐயப்படுகின்றார்கள். நாளடைவில் ஆம் என்ற பதிலை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்கிறார்கள்.

இருவரும் இப்போது தனித்தன்மை பெற்றுவிடுகிறார்கள். இவர்களுக்குள் மட்டும்தான் இந்தப் பார்வை. இப்போது ஒருவருக்கு மற்றவர் உலகமாகி எல்லாமே இருவருக்குள் என்றாகிவிடுகிறது.

இவன் தன் அன்பை அவள் மீது சொரிகின்றான். அதே போல் அவளும். இன்னும்கூட இவர்கள் பேசவில்லை. இவர்கள் இருவரும் மற்றவர்களைத் தவிர தவிர்க்கிறார்கள்.

பொதுவாகப் பேசுகிறார்கள் இப்படி சில நாட்கள், பிறகு பார்வையோடு ஓரிரு வார்த்தைகள், பேசியே ஆகவேண்டிய நிலை. புத்தகங்கள் பறிமாற்றம் – கடிதங்கள் பரிமாற்றம், கடிதங்கள் மனப்பாடம்.

ஒருவர்யொருவர் திறமையால் மதிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. தான் அதிக மதிப்பெண்கள் வாங்கி ஒருவரை ஒருவர் ஆற்றலால் மகிழ்விக்க விரும்புகிறார்கள். தொழிலில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

ஒருவர் சொல் மற்றவர்க்கு வேதவாக்காகப் படுகிறது. அவள் ஒரு சொல் சொன்னால் போதும் இவன் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற ஆற்றல் பெற்று விடுகிறான்.

இப்படி மெல்ல மெல்ல அரும்பிய காதல்தான் மலர்கிறது. மணக்கிறது. நிலைத்து நிற்கிறது.

இத்தகையவர்கள் தவறுவதும் தவறு செய்வதும் மிகமிகக் குறைவு. ஆனால் இப்படிப் படிப்படியாக முயற்சி செய்தால் அது காதலாகும் அல்லவா என்று நினைத்தால் அது காதலாகாது. மாறாக அதுதான்…

(தொடரும்..)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1990

தோழனே!
சிந்தனைத் துளிகள்
உலக வேளாண்மைப் பொருட்காட்சி
இளைஞர்களிடையே காதலும் காமமும்
வேலை இருக்கிறது… வேலை செய்யும் ஆட்கள் தான் இல்லை
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….
நமக்கு வந்த கடிதங்கள்
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
பெண்மை வாழ்கவென்று