Home » Cover Story » ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….

 
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….


கந்தசாமி இல.செ
Author:

வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக் கொண்டும், ஏன்? இல்லாமையையே மூலதனமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தாம் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள். அரிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்கள்.

சாதனை என்பது என்ன? அவரவர் அளவில் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டுவதுதான் சாதனை. நடக்க முடியாதவன் நடந்து காட்டுவது சாதனை. வறுமையில் கிடந்தவன், வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டது சாதனை. இப்படி சாதனையின் அளவுகோல் ஆளைப் பொருத்து மாறுபடும் என்பது அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

அண்மையில் ஓய்வு பெற்ற ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஓய்வு பெற்றபின், தான் படித்து முடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஏ. தேர்வை எழுதும் முயற்சியில் ஈடுபட்டது எனக்கு வியப்பாக இருந்தது.

அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடம். அவர் பள்ளி இறுதித் தேர்வு வரைப் படித்து, தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சூழ்நிலையில், அடிப்படை ஊழியர் நிலையில் ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அன்றைய நிலையில் குடும்பத்திற்கு அவர் ஒரு வேலை செய்து சம்பாதிப்பது மிகவும் தேவையாக இருந்தது. பின்னர் திருமணம், குழந்தைகள், வேலையில் இடமாற்றம், இப்படியே அவர் 36, 37 வயதை எட்டி விட்டார்.

இருப்பினும் படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற தனியாத ஆர்வம் மட்டும் அவரைப் பிடித்து உந்திக்கொண்டே இருந்தது. ஆனால் படித்துப் பட்டம பெறுவதற்கு அஞ்சல் வழிக்கல்வியோ, மாலைக் கல்லூரிகளோ அன்று இல்லை. கல்லூரியில் சேர்ந்துதான் படித்தாக வேண்டும். அது அவரால் முடியாத நிலை.

எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் மாலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் பி.யு.சியில் மாணவராகச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் படித்தார். பி.யு சியை மாலைக் கல்லூரியல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். பின்னர் பி.ஏ. வில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் படித்தார். எல்லாவற்றிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்படிச் சுமார் பதினொரு ஆண்டுகள் தமது 45, 46 வயதுவரை உலகை மறந்து, சுக துக்கங்கள் மறந்து படித்தார். இதற்கு இடையில் தனது அலுவலகத்திற்கும், மாலைக் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஏழு மைல் தூரத்தை சைக்கிளில் சென்றே மீண்டுள்ளார். அதற்குப் பிறகு கல்லூரி மாணவர்களுக்கு அரசு அளித்த கட்டணக்குறைப்பில் பஸ்ஸில் சென்றார். படிப்பு – படிப்பு இதுதான் அவரது மூச்சாக இருந்தது.

பொருளாதார நெருக்கடி, குடும்பம், குழந்தைகள், வாடகை வீடு மாற்றங்கள், இப்படிப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அலுவலகத்திலும் செம்மையாக பணிசெய்து கொண்டு ஒருவர் முன்னேறி இருக்கிறார் என்றால் அதுதான் சாதனை. இன்றைய இளைஞர்கள், அவரது தாள் பணிந்து, இந்த அனுபவங்களைப் பெற்று, முன்னேற வேண்டும். சட்டம் பின்று இளநிலை நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) பதவிக்கு விண்ணப்பித்தார். இவரது கடின உழப்பைக் கண்டு, இவருக்கு இயல்பாக அப்பதவி கிடைத்து. இவருக்கு இவரது மேலதிகாரிகள் அளித்த சான்றிதழ், “கடிகாரம் கூட நிற்கும். ஆனால் இவர் ஒருபோதும் ஓயாமல் பணியாற்றுவார்” என்பது.

சட்டடத்துறையில் பணியாற்றிய போதும், இவர் சும்மா இருக்கவில்லை. மாலைக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் இலக்கியமும் படித்துள்ளார். வேலைப் பளுவின் காரணமாகவும், இடமாற்றத்தின் காரணமாகவும் குடும்பப்பொறுப்பு காரணமாகவும் தேர்வு எழுத முடியவில்லை. இப்பொழுது ஓய்வு பெற்ற பிறகு இதை முடிக்க வேண்டும் என்று தொடங்கியுள்ளார்.

இப்போது தேர்வு எழுதி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, வாழ்க்கையில் எடுத்த காரியத்தை அரைகுறையாக விடக்கூடாது. எடுத்தை முடித்தால் தான் நாம் முழு மனிதர் ஆவோம், என்றார். எதையும் எடுத்து எடுத்து அரைகுறையாக விட்டு விடுகிற நண்பர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

அவர்பட்ட துயரங்களை எல்லாம் அவர் தனக்கு வாய்த்த விழுப்புண்கள் என்று எண்ணுகிறார்.

துன்பம் தான் மனிதனைத் தூயவனாக்குகிறது. துன்பம்தான் மனிதனை வலிமை உள்ளவனாகவும் ஆக்குகிறது. துன்பம் கூட வாழ்க்கையில் தேவைதான். என்று தனக்கு நேர்ந்த துன்பங்களைக்கூட முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்ட அவரது உயர்ந்த தன்மையை உணர முடிந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேட்ட போது, ஒன்று கடின உழைப்பு, மற்றொன்று சத்தியம் தவறாமை, இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றினால், எந்த மனிதனும் வாழ்க்கையில் நேர்மையான முறையிலேயே உயர்ந்துவிடலாம் இது எனது அறிவுரை அல்ல, எனக்கு வாய்த்த அனுபவம் என்றார்.

தனது அருகிலிருந்த அவரது துணைவியாரைச் சுட்டக் காட்டி எனது மனைவியின் தியாகத்தில்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்று நன்றி பாராட்டினார்.

எனக்கு உள்ளம் புல்லரித்தது. ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறே மறைந்து கிடக்கிறது என்பதை உணர முடிந்தது. இவர் வந்த வரலாறு, பிறருக்கு பயன் தரும் வரலாறு.

இது இல்லை, அது இல்லை என்று வருத்தப்படுகின்ற இன்றைய இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாகும். பிறருடைய துனபத்தைப் பார்க்கும்போதுதான், நமது துன்பம் மிகவும் அற்பமானது. இதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்ற உணர்வு பிறக்கும். இவரது வாழ்க்கை, அத்தகைய உணர்வை என்னுள் ஊட்டியது.

இத்தகைய நல்லவர்களால்தான், இந்த உலகம் தழைக்கிறது. இத்தகைய நீதி தேவன்கள் வாழ்க என்று வாழ்த்தத் தோன்றுகின்றது.

இளைஞர்கள் சிந்திப்பார்களாக.

– சிறப்பாசிரியர்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1990

தோழனே!
சிந்தனைத் துளிகள்
உலக வேளாண்மைப் பொருட்காட்சி
இளைஞர்களிடையே காதலும் காமமும்
வேலை இருக்கிறது… வேலை செய்யும் ஆட்கள் தான் இல்லை
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….
நமக்கு வந்த கடிதங்கள்
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
பெண்மை வாழ்கவென்று